இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள்.. சிலரது வாழ்கை ஒரு காவியம். கவியரசரின் வாழ்கை ஒரு ரோல கோஸ்டர் அனுபவத்திற்குச் சமம்.

கவியரசர் வரிகளில் எனக்குப் பிடித்தவை பல அவற்றுள் ஒன்று


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!





சில குறிப்புகள்

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி!
----------------------------------------------------

இந்தியாவில் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனிதர்.

காந்தி இப்போது 500 ரூபாய் நோட்டில் சிரிப்பதற்கும் ஒரு நாள் லீவுக்கும் மட்டும் தான் பயன்படுகிறார்.  இப்போதுள்ள தலைவர்களுடன் அவரை ஒப்பிடுங்கள். சுபாஷ் சந்திரபோஸ் வழி வேறு, காந்தி வழி வேறு. வன்முறை பாதையில் நாம் எதையும் பெற முடியாது. காந்தி விமர்சனத்திர்கு அப்பாற் பட்டவர் அல்லர். ஆனால் பின்பற்றத் தக்கவர். 1948ல் சிதையில் ஏற்றப்பட்டது காந்தியின் உடல் மட்டுமல்ல. அவரது கொள்கையும் தான்.

நள்ளிரவில் சுதந்திரம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. இந்திய சுதந்திரத்தைப் பற்றி வந்துள்ள புத்தகங்களில் மிகச் சிறந்தது. ஆசிரியர்கள்:- டொமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ். படித்துப் பாருங்கள்.

கம்யூனிஸ்ட்
----------------------

நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள்.
ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன்.
என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்

Dom Hélder Pessoa Câmara

உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாட்டில் பார்த்த சில நிகழ்வுகள் எனக்கு கம்யுனிசத்தின்மேல் ஈடுபாட்டை கொடுத்துள்ளது. ந்மது இந்தியாவும் அதே பாதையில் செல்கிறது. மெத்தப் படித்த மேதாவி மன்மோகனும், செட்டி நாட்டிச் சீமான் சீனா தானாவும் 91 ல் நரசிம்ம ராவுடன் சேர்ந்து உலகமயமாக்கல் என்று ஏதோ புரியாத விஷயங்களிச் செய்தார்கள். இப்போது பணவீக்கம் 12% என்கிறார்கள். படிக்காத காமராஜின் தொலை நோக்குப் பார்வையும் 18 டாக்டரேட் வைத்துள்ள மக்கு மோகனின் ஒப்பிடுதல், பெருந்தலைவருக்கு அசிங்கம்.

நமது நாடும் ஒரு வித பொருளாதார திடமற்ற தன்மையினை நோக்கி போகிறது. பெருமுதலாளிகளின் பிடியில் எல்லாத் தொழிலும் போகும்போது. இரத்தம் ஒரே நிறமாகத் தோன்றாது.

விஜயதசமி
--------------------

சின்ன வயதில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை என்பது மிகவும் சந்தோஷமான பண்டிகை. தீபாவளின் ஆரம்ப ஜோர் தெரிய ஆரம்பிக்கும் வாரம். பக்கத்து ஐயங்கார் வீட்டில் கொலு வைப்பார்கள். ம‌ற்ற சமயங்களில் ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்காருக்கு மூன்று கொம்பு என்று பாடி அவரது பசங்களை கிண்டல் செய்தாலும், கொலுவிற்கு போகும் போது சினேகமாக இருப்பார்கள். தீபாவளி களைகட்ட ஆரம்பிக்கும்.பட்டாசுக் கடைகள் ஆரம்பிப்பார்கள். எல்லா கடைகளிலும் பொறி பொட்டுக் கடலை, சுண்டல் தருவார்கள்.

பிற்காலத்தில் திருச்சியில் படித்த போது ஆயுதபூஜை முதல் தீபாவளி வரை NSP ரோட்டில் அலைவோம். சாரதாஸ் வாசலில் காலை 8 மணி முதல் க்யூவில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். அன்றுதான் BHEL-ல் போனஸ் தருவார்கள்.

இப்போதெல்லாம், சாலமன் பாப்பையாவும் ( இவர் சன் டீவி வாசலில் படுத்துக் கொண்டிருப்பார் போல, 15 வருடங்களாக ஒரே முகம், ஒரே வித்மான பேச்சு), இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன..என்று போகிறது.

கடந்த‌ சில வருடங்களாக. வெளி நாட்டில், சுண்டல், பொரியை பேப்பரில் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

வேதிக் டெம்பிள் @  ரெட்மாண்ட்
-------------------------------------------------------

மனைவியின் வேண்டுதலுக்காக பக்கத்தில் இருக்கும் வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்றோம். மைக்ரோசாப்ட்டில் வேலை செய்யும் சிலரால் ஆரம்பிக்கப் பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஓரு சில நடுத்தர வயது ஐயர்கள் பஞ்ச கச்சத்துடன் லேசான குடுமி மற்றும் தாடியுடன் இருந்தனர். சில ஸ்லோகங்கள் வாசித்தார்கள். சிலர் ஐ-பாட் அல்லது ஐ-போனிலும் சிலர் கிண்டில் ரீடரிலும் பார்த்து லலிதா ஸகஸ்கர நாம்மும் , செளந்தர்ய லஹரியும் சொன்னார்கள். பொதுவாக எல்லோரது முகத்திலும் ஒருவித LSD மஹிமை தெரிந்தது. பிரசாதம் என்ற பெயரில் டின்னர் தந்தார்கள். டெக்னாலஜி என்ற பெயரில் வெங்கி காதில் ஐ-பாட் மாட்டாமல் இருந்தால் சரி.

அவர்களது கையில் இருந்த பெளதீக விஷயங்களைப் பார்த்த பின்னர், எனக்கு வைதீக காரியங்களில் நம்பிக்கை வரவில்லை.

என்னால் த‌ண்டிக்கும் தயை காட்டும் கடவுளை நம்ப முடியவில்லை. பிரபஞ்சத்தின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் கடவுள் தேவைப் படுகிறார்.




சின்ன வயதில் உக்கார்ந்த இடத்தில் இருந்து அம்மவைப் படுத்தி இம்சிக்கும் போது, எல்லாருக்கும் ஏதாவது நோய்வந்து படுப்பார்கள் எனக்கு மட்டும் எதுவும் வந்து தொலைக்க மாட்டிக்குது. ஒரு நாள் கூட ஓயிவு இல்லை என்பாள். அறுபத்து நான்கு வயதனாலும் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் சுறுசுருப்பாக இருப்பாள். சிலபேர் வரம் வாங்கி வந்திருப்பார்கள் என் அம்மாவும் அப்படித்தான்.

சமயல் வேலைகளை முடித்துவிட்டு பதினோரு மணிக்கு தட்டில் சாப்பாட்டைக் வைத்துக் கொண்டு எதாவது புத்தகத்துடன் மெதுவாக சாப்பிட்டுக் கொண்டே படிப்பாள். ஓஷோவிலிருந்து சுஜாதா, கம்பியுட்டர் என்று அவளது தேடல் விஸ்தாரமானது.

கல்யாணமாகி ரொம்ப வருஷங்கள் குடும்பத்தாரை எதிர்த்துப் பேசாமல் ஒரு இன்ரோவர்ட்டாக இருந்தாள். பின்னர் ஆம்பிவெர்ட்டாகவும் எக்ஸ்ரோவெர்ட்டாக என்று காலதோடு மாறியவள். நாங்களெல்லாம் வளர்ந்து விட்ட போது அம்மா பேசத.. என்று அடக்குவோம்.

ஊரே மாமி என்று கூப்பிடும். யாரோடும் சண்டை போட மாட்டாள். அவளது கையால் சாப்பிடாத குழந்தைகள் எங்கள் தெருவில் கிடையாது. காலையில் என்ன டிபனாக இருந்தாலும் முதலில் குழந்தைகளுக் கொடுப்பாள்.

எங்கோ கொல்லிமலை அடிவாரத்தில் பிறந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆலங்குடி என்ற கிராமத்தில் வாழ்ந்தாள். முதல் முதலில் அமெரிக்கா வந்தபோது மிகவும் இளைத்து இருந்தாள். ஸ்பேஸ் நீடில் மேல் சென்றபோது கண்களில் நீர்வர உன்னைப் பெற்ற பயனை நான் அடைந்தேன் என்றாள்.

ஒரு நாள் திடீரென்று அம்மாவை வேலூரில் சேர்த்தோம். சிஸ்டமிக் ஸ்கெலரோ டெர்மா என்றார்கள். கோடியில் ஒருவருக்கு வரும் என்றார்கள். அவள் கோடிப் பேரில் ஒருத்திதான். பேச முடியவில்லை அவளால். மெல்லச் சொன்னாள் பேசாத பேசாதன்னு சொன்ன... முடியலடா... உடைந்து போனோம்.

அவளுக்கு பொதுவாக தன்னம்பிக்கை அதிகம். ஆனால் அன்று நம்பிக்கை குறைந்த்து போல.. சட்டென்று விட்டுப்போனாள். ஊரே அழுதது. ரோஜாக்களுக்கு நடுவே அவளைக் எடுத்துச் சென்றபோது அப்பா என் தேவதையே என்ன விட்டுட்டுப் போரியே என்று அழுதபோது தேற்றிய யாரோ சொன்னார்.. சாமி தேவதைகள் பிறப்பது இல்லை இறப்ப‌தும் இல்லை.. சில சமயம் பூமிக்கு வந்து செல்வதுண்டு...

(இந்தப் படம் எடுக்கப்பட்டதிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் என் அம்மா பூமியை விட்டுச் சென்றார்).


R. வசந்தா தேவி

பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை 17/08/1947 க்கும் 17/08/2010 க்கும் இடையே பூமிக்கு விஜயம் செய்தார்