அவன் எப்போதும் தனிமையாக இருப்பான். நண்பர்கள் மிகக்குறைவு. லேசான பெண்தன்மையும் சற்றே தடித்த உருவமும் கொண்டவன். எங்க செட்ல அரும்பு மீசை முளைத்த மொத‌ பையன்.

வெள்ளை நிற சட்டைக்குக் கீழே நீல நிற பனியன் எப்போதும் வெளியே தெரியும்படி அணிந்து வருவான். எல்லோரும் மஞ்சள் பையில் புத்தகங்களைக் கொண்டு வருவோம். அவன் மட்டும் ஒயர் கூடையில் கொண்டு வருவான். மிக நன்றாகப் படிப்பான். கையெழுத்து மிக அழகாக இருக்கும். வீடு விட்டால் ஸ்கூல், ஸ்கூல் விட்டால் வீடு. அவனை வேறு எங்கும் பார்க்க முடியாது.

அவன் வெகுளியா இல்லையா என்று தரம் பிரிக்கத்தெரியவில்லை. ஆனால் எங்கள் பள்ளியில் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். எங்க ஊரில் இரண்டு ஆரம்பப் பள்ளிகள். ஒன்று ஆர். சி பள்ளி மற்றொன்று அரசு தொடக்கப்பள்ளி. ஆர்.சி பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகள் என்ற அபிப்பிராயம் எல்லோருக்கும் உண்டு. நாங்களெல்லாம் இரண்டாம் தர குடிமக்கள். இந்த இருவரும் அரசு பொது உயர்நிலைப் பள்ளிக்கு 9 முதல் 12 வரை படிக்க வர வேண்டும். அது ஒரு கடல்.

நான் முதலில் 9ம் வகுப்பு அடியெடுத்து வைக்கும் போது, இந்த பேதம் முதல் நாளே தெரிந்தது.  எங்கெல்லாம் பேதமும் வர்கமும் இருக்கிற‌தோ அங்கெல்லாம் ஒரு தலைவன் உருவாக்கப்படுவான். எங்களைப் போன்ற கடை நிலை மாணவருக்கு அவன் எப்போதும் துணை நின்றான். ஆர்.சி vs அரசு மாணவர்களிடையே அவன் நடுநிலையாளனாக இருந்தான். என் முதல் நண்பனும் அவன் தான்.

ஒரு நாள் இன்னொரு பையன் அவனை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிவிட்டான். நம்ம நண்பன் ஆசிரியரிடம் சென்று சார் பழனியப்பன் என்னைய‌ கெட்ட வார்த்தை சொல்லி திட்றான் சார் என்றான். அந்த ஆசிரியரோ உண்மையில் ஆ-சிறியர். அவர் என்னடா சொல்லி திட்டினான் என்றார். இவன் திரும்பத் திரும்ப கெட்டவார்த்தை சார் என்றான்.  அவரும் விடுவதாக இல்லை.

கொஞ்சம் நேரத்தில் கடுப்பான நம்ம நண்பன்  ******* சார்னு வெகுளியாகச்சொல்லி அடிவாங்கினான்.

இப்படிப்பட்ட introvert மனநிலை கொண்ட நண்பனிடம் நல்ல ஆளுமை இருந்தது.

நாட்கள் உருள,  நாங்கள் பத்தாம் கிளாசில் அடி வைத்தோம். என்போன்ற கடைநிலை மாணவர்கள் எவ்வளவோ அவமானங்களை சந்தித்தாலும், அவன் சிரித்த முகத்தோடு சொல்லுவான், பங்காளி, யார் என்ன சொன்னாலும் முயற்சியைமட்டும் விட்றாதடா!

நாங்க எல்லோரும் பத்தாவது தேறினோம். ஒரு நாள் அவன் எங்க‌ளை பிரிந்து சென்றான்.  எங்கோ அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் அவன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடந்த 20 வருடங்களில் நான் பார்த்த மிக வித்யாசமான மனிதர்களில் நண்பரும் ஒருவர்.

நான் எவ்வளவோ தேடியும் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள்  மட்டும் நினைவில் உள்ளது
பங்காளி, யார் என்ன சொன்னாலும் முயற்சியைமட்டும் விட்றாதடா!

நடராஜா நீ எங்கே இருக்கிறாய்?

0 comments:

Post a Comment