எனக்கு அமெரிக்கர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். விளம்பர உத்திகளில் அவர்கள மிஞ்ச ஆளில்லை.
நான் வசிக்கும் சியாட்டில் அருகே கெல்சி க்ரீக்(Creek) என்று ஒரு இடம் இருக்கிறது. கிரீக் என்றால் ஒரு சிறிய ஓடை என்று பொருள்.

விஷயம் என்னவென்றால், கடந்த மூன்று மாதமாக நான் செல்லும் வழியியெங்கும் ஒரு சின்ன விளம்பரப் பலகை இருந்தது. கெல்சி கிரீக் ஆட்டு/மாட்டுப் பண்ணை கண்காட்சி என்று ஒரு தேதியும் இருந்தது. என் மனைவியும், நம்ம பாப்பாவை கூட்டிகிட்டுப் போகணும் என்று அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் சொல்லுவாள். நான்னும் சரி என்பேன். எனக்கு ஆடும் மாடும் புதியவையல்ல. கிராமத்தில் வளர்ந்ததால் நாங்கள் அவைகளோடு வளந்தோம். ஆனால் என் மூன்று வயது மகளுக்கு அவை புதியவை. இங்கு சுதந்திரமாக ரோட்டில் ஒரு மாட்டையோ ஆட்டையோ பார்க்க முடியாது. ( என்ன ஊர் இது?)

OMR ரோட்டில் ஐந்து வருடங்களுக்குப் முன்னால் நாவலூருக்கு அருகே குறைந்தது 200 மாடுகளாவது திரியும். எத்தனையோ விபத்துகள் நேர்ந்தன. நானும் தப்பித்து இருக்கிரேன். சின்ன வயதில் TVs 50 ல் அல்லது சைக்கிளில் செல்லும் போது, வழியில் தென்படும் ஆடு, மாடு, பன்னி என்று எது நின்றாலும், மெதுசால அதன் அருகில் சென்று, பின்னால் இருக்கும் பையன் ஓங்கி ஒரு உதை விடுவோம். இப்போது பரிணாமம் அடைந்து விட்டோம்.


மனைவின் தொல்லை தாங்காமல் நாங்களும் அந்த கண்காட்சிக்குச் சென்றோம். சுமார் இரண்டு மைல் தொலைவுக்கு கார் பார்க்கிங் கிடைக்கவில்லை. காரை 2 மைலுக்கு அப்பால் பார்க் செஇதுவிட்டு  நடந்து சென்று பார்த்தோம்..

வழி நெடுக பாப்கார்ன் மற்றும் பஞ்சு மிட்டாய் போன்றவைகள் விற்றார்கள். ஒரு இடத்தில் ஒரு பெரிய க்யூ இருந்தது.
ஐந்து குதிரைகளை வைத்து ஒரு ரங்கு ராட்டிணம் வைத்திருந்தார்கள். ( உண்மையான குதிரைகள்).  மேலும் டிராக்டரில் வைக்கோல் கட்டு வைத்து( சீட்டுக்குப் பதில்) 15 டாலருக்கு ட்ரிப் அடித்தார்கள். என் மகளும் பாப்கார்ன் கேட்டு உருண்டு பிறண்டு அழுதாள்.

அங்கு நிற்கப் பொறுமையில்லாமல் நாங்களும் உள்ளே சென்றோம். வழிநெடுக அமெரிக்க கணவன்மார்கள் ஹனி, பேபி என்று குழந்தைகளையும் மனைவிகளையும் கொஞ்சிக்கொண்டு, ஹீ ஈஸ் லுக்கிங் க்ரேட் என்று சொல்லிச் சென்றனர்.
அப்போதே சுதாரித்து இருக்க வேண்டும்.

ஓரு பெரிய பட்டி இருந்தது. 15 சென்ட் இடத்தில் பெரிய வேலிக்கு இடையில், ஒரே ஒரு கொழு கொழு ஆடு நின்று கொண்டிருந்தது.  ஸற்று தள்ளி ஒரு மாடு இன்னொரு பட்டியில் இருந்தது. அதைச் சுற்றி ஒரு பெரிய கும்பலே இருந்தது.


எனோ எனக்கு OMR ல் நான் பார்த்த இளைத்த மாடுகளும் நாங்கள் உதைத்து விளையாண்ட மாடுகளும் ஒரு கணம்  நினைவில் வந்து போயின...


பட இணைப்பு: பழைய படம்.



அறத்துப்பால் - இல்லறவியல் - புதல்வரைப் பெறுதல்

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

குறள் 66:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

குழந்தைத்தன்மை என்பது கடவுள் தன்மையினும் மேலானது. அதை கட்டுப்படுத்தாமல் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள்.

என் மகள் புதிதாக ஒரு ஸ்கூலில் சேர்ந்து இருக்கிறாள். அது மான்ட‌சரி யுக்தியை கடை பிடிக்கும் பள்ளி. அந்த‌ப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. பொதுவாக நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவேன். நேற்று நான் அந்த ஆண்டு விழாவைப் பார்த்த போது எனக்கு ஒரே நாஸ்டால்ஜிக்காக இருந்தது.

என்னுடைய பள்ளிக்காலத்தில் மூன்று அல்லது நான்கு முறை ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. ஆனால், மாணவர்களது திறமையை வெளிக் கொண்டுவருவதை விட, வந்திருக்கும் MLA அல்லது விழாத் தலைவரின் இருப்பு தான் முதன்மைப்படுத்தப்படும்.

மேலும் அங்கு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சினிமா பாட்டிற்குத்தான் குழந்தைகள் ஆடுவார்கள். என்னுடைய நண்பனின் வேட்டி மேடையில் அவிழ்ந்த காமெடியும் உண்டு. 25 வருடங்களுக்கு முன்னால், பாரதியார் பாட்டு, பாரதிதாசன் பாட்டு என்று நடனமாடுவார்கள். ச‌மீபத்திய காலங்களில்,  மாங்குயிலே,, பூங்குயிலே-ல் ஆரம்பித்து இப்போது எங்கோ சென்றுவிட்டது.

குழந்தைகள் அனைவரும் விழாத்தலைவர் வரும் வரை காத்திருப்பார்கள். சிலபேர் தூங்கிப்போவார்கள். ஆனாலும் அது ஒரு நல்ல அனுபவம். பேச்சுப் போட்டியில் டேபிளில் குத்திப் பேசினால் பரிசு குடுப்பார்கள் கைதட்டல் விழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு. அது உணர்ச்சிப் பூர்வமாகப் பேசும்போது செய்ய வேண்டும் என்று தெரியாது.

நேரு 1889 ஆம் வருடம் பிறந்தார் என்று டேபிளில் நங் என்று குத்துவார்கள். ஒரு முறை நண்பர் ஒருவர் பேசியபோது பக்கத்தில் டேபிள் இல்லாததால், கிழே இறங்கிப்போய் நடுவரது டேபிளில் ஓங்கிக் குத்தி நடுவரைப் பயமுறுத்தினான்.

இன்னொருவர், பேசியபோது டேபிளில் குத்த மறந்துவிட்டு, மேடைக்கு மறுபடியும் வந்து சார் ஒரு நிமிஷம், குத்த மறந்துவிட்டேன்ன்னு சொல்லி ஓங்கி ஒரே குத்து டேபிளில், பழைய டேபிள் உடைந்து எல்லொரும் சிரித்தனர்.

இந்த நினைவுகள் எல்லாம் பசுமையானவை. காலங்கள் மாறினாலும், குழந்தைகளின் மனோபாவம் மாறுவதில்லை.

நேற்று நடந்த ஆண்டு விழாவில், பாடல்களுக்கு இரண்டரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகள் ஆடினார்கள். டீச்சர் முன்னால் நின்று சமிக்கை செய்ய குழந்தைகள் அதை திரும்பச்செய்தனர். ஒரு சில குழதைகள் கோர்வையாக செய்யாமல், சற்று தாமதமாக ஆடியது அழகாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ஒரு சிலர் வாயில் கையை வைத்துக்கொண்டு நின்றனர்.

நிகழ்ச்சின்  வீடியோ பதிவு






பல சமயங்களில் பொறுமை இழந்து தவிர்த்த இந்த விழாக்களை இப்போது மட்டும் ஏன் நான் ரசிக்கிறேன்? என் குழந்தை ஆடுவதப் பார்த்த என் கண்களில் ஏன் ஆனந்தக் கண்ணீர் வருகிறது?  புரிந்தவர் யாரேனும் சொல்லுங்கள்..






நாம் வெளிப்படையான வன்முறையையோ, நடவடிக்கையையோ தவிர்த்து விடலாம் ஆனால் விரோதத்தின் சாயலை தவிர்க்க முடியாது....
                                                                                                                                                                                                   வில்லியம் ஹால்ட்ஸ்னர்

இந்தப்பதிவு தமிழ் சினிமாவின் மேல் என்னுடைய பலநாள் கோப‌ம், வயிற்றெரிச்சல். கோபத்தின் வெளிப்பாடு கோர்வையில்லாமல் இருக்கலாம்.. அனால் உண்மையில்லாமல் இல்லை.....

த‌மிழன் ஏன் தன் தலைவனை சினிமாவில் மட்டும் தேடுகிறான்.?

இந்தக் கேள்வி என் மனதை எப்போதும் அறித்துக்கொண்டே இருக்கும். நாட்டில் சினிமாக்காரனை விட்டால் வேறு யாருமே இல்லையா? அதுவும் நம்ம தமிழ்நாட்டில் ஏன் இந்த அவல நிலை?67 க்குப் பிறகு சினிமா தொடர்புடையவர்கள் தான் தமிழ் நாட்டை ஆண்டு வருகிறார்கள். நமக்கும் ஒருவித ஆட்டு மந்தை மனநிலை வந்துவிட்டது,

30 வருடங்களுக்கு முன்னால் நம்முடைய அப்பா அல்லது ஆசிரியர் நமக்கு மாடலாகத்தெரிவார்கள். இப்போது, நடிகர்கள். பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என்று கொண்டாடப்படுகிறார்கள்.

நம்மை ஆளும் அரசுகளுக்கும் நம்முடைய அறிவை வளர்ப்பதை விட நமது அறியாமையை வளர்ப்பதுதான் குறிக்கோளாக உள்ளது. ஒரு வயசிலேயே டீ.வி பார்க்கும் குழந்தைகள் மனதில் இந்த சினிமா என்னும் நஞ்சு விதைக்கப்படுகிறது. நிலா நிலா ஓடி வா போய், என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குதுன்னு 3 வயசு குழந்தை பாடுது.

சினிமாவில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்று இல்லை. எல்லாம் ஒருவிதமானவை தான். ஒரு டெம்பிளேட் கதை,  ஒரு opening பாட்டு, ஒரு குத்துப்பாட்டு, 2 duet , ஒரு ததுவம் (அ) சோகப்பாட்டு. 5 சண்டை, கொஞ்ஜம் சிரிப்பு, சென்டிமெண்ட் இல்லாட்டி கருப்புப் ப‌ணத்தை ஹீரோ ஒழிப்பார். ( இவர்களது கருப்புப் பணத்தை யார் ஒழிப்பார்?).

அடுத்து நம்ம ஹீரோக்களது இம்சை... அதுவம் ரெண்டு படம் ஹிட்டாகிவிடால் போதும், உடனே பட்டம் வேறு. இளைய தளபதி, சின்னத்தளபதி, புர்ச்சி நடிகர், எந்த சண்டையில் போய் கலந்துகிட்டார்ன்னு தளபதி பட்டம். என்ன புரட்சி பண்ணினார்ன்னு புரட்சிப் பட்டம். அப்ப உண்மையிலேயே புரட்சி செய்தவர்களை என்னவென்று சொல்வது.
ரெண்டேபடம் ஓடினால் போதும், அடுத்த முதல்வர், பிரதமர்.. அமெரிக்க அதிபர் ஆசை வந்துவிடும் இவனுங்களுக்கு.
தெரியாமத்தான் கேட்கிறேன்... ரெண்டு operation நல்லபடியாக செய்துவிட்டு ஒரு டாக்டர் முதல்வர் கனவு காண்கிறார?
அல்லது வேறு எந்தத் துறையிலாவது இந்தப் பேராசையுள்ளதா?

டைரக்டர் கதையை சொல்லும்போதே பில்டப்போடுதான் சொல்கிறார்...

டைரக்டர் :  500 அடி உயரத்தில் நீங்க தொங்குறீங்க.. உங்க கா..ல புடிச்சு ஹீரோயின் தொங்குறாங்க...
ஹீரோ : ஹீரோயினும் தொங்குராங்களா.... அப்ப 1500 அடி உயரத்ல தொங்குர மாதிரி வைங்க...

இப்படித்தான் இவர்களது பில்டப்....... பார்க்கிர ரசிகனும், தலைவர் 1500 அடி உயரத்திலே நூல புடிச்சு தொங்குறார்னு  விசில் அடிக்கிறான். இது அறியாமை இல்லை... 50 வருடங்களாயுள்ள அடிமைத்தனம்.. ( வெள்ளைக்காரனிடமிருந்து தாத்தாக்கள் காப்பாதினாங்க... இவனுகள்டேந்து யார் காப்பாத்துவா?)

அடுத்து இயக்குனர்கள்...

ரெண்டே ரெண்டு படம் எடுத்துட்டால் போதும் ஒரு இயக்குனர் என்ன வேணும்னாலும் பேசலாம், நாட்ல நடக்காததையா நாங்க எடுக்கிறோம்ன்னு சொல்றான்.  நிஜ வாழ்கையில் எந்த ஊரில் பெண்கள் அவுத்துப்போட்டுட்டு ஆடுறாங்கன்னு  தெரியல. அதுவும் அவரது பொண்டாட்டி ஒரு அறிவு ஜீவியாக நினைத்து விட்டால் போதும், எந்த சேனல்லயாவது போய் எவன வேணும்னாலும் விமர்சிப்பார்.  அனாஅவ‌ புருசன் எடுக்கும் படம்பத்தி மட்டும் பேசவே மாட்டா. சமீபத்தில் ஒரு நல்ல நாவல் இவர்களது கொத்திலிருந்து தப்பித்தது.

நடிகைகள்.....

இவர்களைப் பற்றி எழுத புதிதாக ஒன்றுமில்லை. அவர்கள் காய்த்த மரங்கள்.. எப்போதும் கல்லடி படுபவர்கள்...

சினிமா ஒரு ஃபேன்டசி சமாச்சாரம்.  அதை நீங்கள் ஒரு போழுதுபோக்காக மட்டும் செய்தால், நாங்களும் உங்களை விமர்சிக்கப்போவதில்லை. என்னமோ நீங்கள்தான் தமிழ் கலாச்சாரத்தின் காவலர்கள் மாதிரி பேசுவதுதான் எல்லா விமர்சனத்திற்கும் காரணம். எப்போதும் ஆட்சியாளர்களின் அடிவருடியாகவே செயல்பட்டு, மக்களை உணர்ச்சிப் பூர்வமாகத்தூண்டி ஊர் சண்டையில் ஊருகாய் நக்கப்பார்ப்பது தான் உங்களது தமிழ்ச்சேவை.

காவிரி பிரச்சனையாக இருக்கட்டும், ஈழத்தமிழர் பிரச்சனையாக இருக்கட்டும்( ஒரே ஒரு விதிவிலக்கு) எவன் வீட்டில் எழவு விழுந்தாலும், அதை உங்கள் தரம் கெட்ட விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொள்வீர்கள். பக்கத்து மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்படமாட்டீர்கள். உங்களுக்குத் தேவை, விளம்பரம்.

தமிழ் தமிழ் என்று வியாபாரம் செய்யும் நீங்கள், எத்தனை த‌மிழப் பெண்களை கதாநாயகியாக்கியிருக்கிரீர்கள்? கேட்டால் அது படைப்பாளியின் சுதந்திரம். தனக்கு தன‌க்குன்னா...  கிளை வெட்டும்...

தமிழ் தமிழ் என்று பேசும் சினிமாகாரர்கள் சினிமாவில் தமிழ் வாத்தியாரைத்தான் கேவலமாகக் காண்பிப்பார்கள். படைப்பாளிகள் சுதந்திரம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அக்ரமங்களுக்கு அளவே இல்லை.

தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளந்துவிடும் என்று ஒரு மூட‌ நம்பிக்கை வேறு. ஒரு குரூப் நேட்டிவிட்டியாக படம் எடுக்கிறேன்னு கொல்ரானுங்க.  காதல், காமம், கவர்ச்சி, குடி, குட்டி இதுதான் இவர்கள் சினிமா.

அடுத்து ஆட்சி மாற்றம் வந்துவிட்டால், வேறு யாரவது தனது பதவியைத் துறக்கிறார்களா? ஆனால், சினிமா சங்கத்தலைவர்கள் மட்டும் பதவி இறங்கினார்கள். ஏன்? ஆட்சியாளர்களை எப்படியாவது அடி வருடி...***** வேண்டாம்..... கெட்ட வார்தைகள் வருகிறது.

தமிழ் அல்லது த‌மிழ் கலாச்சாரம் பற்றிப் பேச‌ சினிமாகாரன் எவ‌னுக்கும் தகுதி இல்லை.



நான் B.Sc படிக்கும்போது கிட்டத்தட்ட அம்மாஞ்ஜி மாதிரி பெரிய கண்ணாடி, அந்தகாலத்து கார்பன் மெட்டல் ஃப்ரேம் போட்டு தலையை அழுத்தி வாரி, சுருள் தலையுடன் திரிவேன். கிராமத்து சொல்வாடையும் இருக்கும். என்னுடைய பாஸ்போர்ட்டில் இருக்கும் என் பழைய போட்டோவைப் பார்த்த என் மனைவி, இந்த போட்டோவைப் பார்த்திருந்தால் நான் உன்னை ரிஜட் செய்திருப்பேன் என்பாள். அப்படி ஒரு முகம் எனக்கு. இப்போதும் அப்படித்தான், ஆனால் மீசை வளர்ந்தால், கொஞ்சம் மாறி இருக்கு. After all every dog has its day and Pair.

நான் B.Sc திருச்சியில் படித்தேன். பொதுவாக ஒரு காலேஜில் இரு விதமான Group இருக்கும். 1. தமிழ் மீடிய பசங்கள் 2. ஆங்கில மீடிய பசங்கள். அதிலும் என் போன்ற கிராமத்து அம்மாஞ்ஜிகளைக் கண்டால், வாத்தியார் உட்பட அனைவருக்கும் கொஞ்ஜம் இளக்காரம் தான். அதிலும் சில லெக்சரர்கள் வேண்டுமென்றே அவமானப் படுதுவார்கள்.
கம்பியூட்டர் சயன்சில் தலையும் புரியாதி வாலும் புரியாது, ஒரே குழப்பம் தான். எங்களது ஒவ்வொரு இயலாமையும் அவர்களுக்கு சிரிப்பாக இருக்கும்.

ஒரு சின்ன தயக்கம் மேலும் பயமும் சேர்ந்து, வார்தை வராது. வெறும் காத்து தான் வரும். இரண்டாவது ஆண்டில் ஒரு லெக்சரன் வந்தார். அவரும் நம்ம வகைதான். தமிழ் மீடியத்தில் படித்தவர். நிறைய தடுமாறுவார். நம்ம இங்லீசு மீடிய பசங்கள் சொல்லவே வேண்டாம். அதர்களம் செய்வார்கள். அவர் ஒரு நாள் பாடம் நடத்தும் போது, Center Point என்பதை மையப்புள்ளி என்றார். உடனே நம்ம பசங்கள் அவருக்கு மையப்புள்ளி என்று பெயர்வைத்தனர்.

கொஞ்சம் நாளில் நகரம் தந்த வேகத்தில் அடிப்படை மறந்து நானும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பிதேன். அதற்கு அப்புறம் நான் அவர் பெயரைச் சொன்னதில்லை. எப்போதும் மையப்புள்ளி தான். ஆவரை நாங்கள் பாடல் நடத்தவிட்டதே இல்லை.  இன்னொருவர் தடுமாற்றம் இப்போது எனக்கு சிரிப்பானது.

சில வருடங்கள் கழித்து M.Sc படித்து விட்டு சென்னையில் ஒரு interview வில், ஒரு கேள்விக்கு used to holded and was the first tuple etc என்று எதேதோ உளறிக் கொட்டியபோது, எனோ எனக்கு மையப்புள்ளியின் ஞாபகாம் வந்தது.

தெய்வம் நின்று கொல்லும்......